Saturday, April 27, 2013

என்றும் பதினாலு!

'விஞ்ஞான முறை நிர்வாக இயலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்றி ஃபாயல் (Henri Fyol) 'விஞ்ஞான முறை நிர்வாக இயலின் அடிப்படைத் தத்துவங்கள்' என்று பதினாலு (பதினான்கு) விஷயங்களைக் குறிப்பிட்டார். 

இந்தப் பதினான்கு கோட்பாடுகளும் இன்றும் நிர்வாக இயலின் அடித்தளக் கற்களாக விளங்குகின்றன. இவற்றை முதலில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1) வேலையைப் பகிர்ந்தளித்தல்
எந்த ஒரு வேலைக்கும் பல கூறுகள் உண்டு ஒருவரே ஒரு வேலையின் பல கூறுகளையும் செய்யும்போது, ஒவ்வொரு வேலைப் பிரிவுக்கும் அவரது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் அவரது உற்பத்தித்திறன் குறைகிறது என்பது ஹென்றி ஃபாயலின் கூற்று.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் தினமும் அறுநூறு கடிதங்கள் அனுப்பப்படுவதாக வைத்துக் கொள்வோம். இந்த வேலையை மூன்று பேருக்குப் பகிர்ந்து கொடுப்பதாக இருந்தால் இதை இரண்டு விதமாகச் செய்யலாம்.

ஒவ்வொருவருக்கும் இருநூறு கடிதங்களை அனுப்பும் பொறுப்பைக் கொடுப்பது ஒரு வகை.

ரவி, ரகு, ரேவதி என்ற 3 பேருக்கு இந்த வேலை பகிர்ந்தளிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். (மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்திருக்கிறோம்!)

மொத்தக் கடிதங்கள் 600.

ஒவ்வொருவருக்கும் 200 கடிதங்களை அனுப்ப வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) கடிதத்தை மடித்து உறைக்குள் வைப்பது
2) உறையில் விலாசம் எழுதுவது
3) உறையை ஒட்டி, தபால் தலை ஒட்டுவது.

ரவி என்ன செய்வார்? முதல் கடிதத்தை எடுத்து, மடித்து உறைக்குள் போடுவார். பிறகு உறையில் விலாசம் எழுதுவார். பிறகு உறையை மூடி, ஒட்டி, தபால் தலை ஒட்டுவார். 

இதுபோல் ஒவ்வொரு கடிதமாக எடுத்து, ஒவ்வொரு பகுதியாக வேலையைச் செய்து முடிப்பார். இருநூறு கடிதங்களையும் இவ்வாறு தயார் செய்வார்.

இதேபோல், ரகுவும், ரேவதியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இருநூறு கடிதங்களைத் தயார் செய்வார்கள்.

இந்த மூன்று வேலைகளையும் ஒருவரே மாறி மாறிச் செய்யும் இந்த முறையில் சில குறைபாடுகள் உள்ளன.

1) ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது சற்றே நேரம் வீணாகும். இதனால் உற்பத்தித்திறன் (செயல் திறன்) குறையும்.

2) ஒரு வேலையின் பல பகுதிகளையும் ஒருவரே செய்யும்போது, அவரது கவனம் சிதறி, சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏதாவது ஒரு உறையில் விலாசம் எழுதாமல் விடுபட்டுப் போகலாம். இன்னொரு உறை சரியாக ஒட்டப்படாமல் இருக்கலாம். மற்றொரு உரையில் தபால் தலை சரியாக ஒட்டப்படாமல் அது உறையிலிருந்து கீழே விழுந்து விடலாம். 

திருமண அழைப்பிதழ்கள் அனுப்பும்போது இது போன்ற தவறுகள் ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். சில சமயம் தவறின் பலனையும் அனுபவித்திருப்போம். ('என்னப்பா, கல்யாணத்துக்கு மொய் எழுத மாட்டேன்னு நெனைச்சு, பத்திரிகை வாங்கும்போதே டியூ கட்டி வாங்க வச்சுட்டியே!)

இந்த வேலையை இன்னொரு விதமாகவும் பகிர்ந்தளிக்கலாம்.

1) கடிதங்களை மடித்து உறையில் போட வேண்டியது ரவியின் வேலை (600 கடிதங்களையும்.)

2) உறைகளில் விலாசம் எழுதும் வேலை ரேவதியுடையது.

3) உறைகளை ஒட்டி, ஸ்டாம்ப் ஒட்டும் வேலை ரகுவுடையது.

இந்த முறையில், ஒவ்வொருவரும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால், அந்த வேலையில் அவர் திறமை வளர்கிறது. 

ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப்ப் பலமுறை செய்வதால், அந்த வேலையைச் சுலபமாக (லாகவமாக), வேகமாக, திறமையாகச் செய்யும் வழிகளை அவர் தன்னையறியாமலே கண்டு பிடிப்பார். இதனால் அவரது செயல் திறன் கூடும்.

இரண்டாவதாக, வேலை ஒரு வரிசை முறையில் நடைபெறுவதால், எந்த ஒரு பகுதியும் விட்டுப் போவதற்கான வாய்ப்புக் குறைவு.(கடிதத்தை உறைக்குள் போட மறந்து ஸ்டாம்ப் ஒட்டுவது போன்ற தவ்றுகள்)

ரவி ஒவ்வொரு உறையாக எடுத்து, கடிதத்தை உள்ளே வைத்து ரேவதியிடம் கொடுக்க, ரேவதி அவற்றில் விலாசம் எழுதி ரகுவிடம் கொடுக்க, ரகு உறையை ஒட்டி, ஸ்டாம்ப் ஒட்ட, வேலை நிறைவு பெறுகிறது. இதனால், விலாசம் எழுத விட்டுப் போவது, ஸ்டாம்ப் ஒட்ட விட்டுப் போவது போன்ற தவறுகள் நேரும் வாய்ப்பு மிகக் குறைவு.

மேலும் பசை ஒட்டும் வேலையை ரகு மட்டுமே செய்வதால், கடிதத்தை உறையில் போடும்போதும், விலாசம் எழுதும்போதும், பசை படிந்த கையினால் தொந்தரவு வராது. மேலும், வேலை முடிந்ததும், ஒருவர் (ரகு) மட்டும் கை கழுவினால் போதும். இதனால், தண்ணீர் மற்றும் சோப்பைக் குறைவாகப் பயன்படுத்தினால் போதும்.

இந்த வேலையின் மூன்று பகுதிகளையும் இதேமுறையில் ஒருவரே செய்யலாமே என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்..

அதாவது, ரவியை எடுத்துக் கொண்டால், முதலில் எல்லாக் கடிதங்களையும் ஒவ்வொன்றாக உறையில் போடுகிறார்.
இரண்டாவதாக, எல்லா உறைகளிலும் விலாசம் எழுதுகிறார்.
மூன்றாவதாக, உறைகளை ஒட்டி, அவற்றின்மீது ஸ்டாம்ப் ஒட்டுகிறார்

இதுபோல், ஒரு வேலையைப் பகுதி பகுதியாகப் பிரித்துச் செய்தாலும், இதே போன்ற பலன் தான் கிடைக்கும். 

ஒருவேளை, கடிதங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், வேலையின் மூன்று பகுதிகளையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஒருவரே செய்ய வேண்டியிருக்கலாம். 

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது, முதலில் ஒரு கடிதத்தை எடுத்து உறையில் போட்டு, ஸ்டாம்ப் ஒட்டுவதை விட, முதலில் எல்லாக் கடிதங்களையும் உறைகளுக்குள் போட்டு விட்டு, பிறகு விலாசம் எழுதி, பிறகு ஒட்டுவது சிறப்பானது.

இதைத்தான் ஹென்றி ஃபாயல்  Division of Labor என்று குறிப்பிடுகிறார்.

Thursday, August 18, 2011

விஞ்ஞான முறை நிர்வாக இயல்

உலகிலேயே  மிகச் சிறந்த நிர்வாகி யார் என்ற கேள்வியுடன் முதல் பகுதியை முடித்திருந்தோம் 

சிறந்த நிர்வாகி யார் என்று உலகெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அவ்ர் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார். அவர்தான்....  

இல்லத்தரசி!

இவர் உங்கள் மனைவியாகவோ, தாயாகவோ இருக்கலாம்.
ஒரு இல்லத்தரசி குடும்பத்தை நிர்வகிக்கும் வழிமுறைகள் நிர்வாக நடைமுறைகளுக்கு இணையானவை என்று சில நிர்வாக இயல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது எவ்வாறு என்பதை நிர்வாக இயல் தத்துவங்களை விரிவாக அறிந்துகொண்டபின் நீங்களே உணர்வீர்கள். இப்போதைக்கு, இந்தக் கூற்றுக்கு ஆதராவாக வள்ளுவரின் ஒரு குறளை மட்டும் குறிப்பிடுகிறேன். 

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை."

இல்லத்தரசி சிறப்பான குணங்களைப் பெற்ரிருந்தால், அந்த இல்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை. மாறாக, இல்லத்தரசியிடம் சிறப்பான குணங்கள் இல்லாவிடில், அந்த இல்லத்தில் எதுவுமே இல்லை' என்பது இந்தக் குறளின் பொருள்.

மாண்பு என்று வள்ளுவர் குறிப்பிட்ட்டது குணங்களை மட்டும் இல்லாமல், திறமைகளையும் குறிக்கும் என்று கொள்ளலாம்.

இதையொட்டித்தான், கவிஞர் கண்ணதாசன்   'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார்.

எனவே, உலகின் சிறந்த நிர்வாகி நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பதில் பெருமை கொண்டு, மேலே செல்லலாம்.

நிர்வாக இயல் என்பது பல்லாண்டுகளாக அறியப்பட்டும், பின்பற்றப்பட்டும் வரும் ஒரு வழிமுறை. ஆயினும், இது ஒரு முறையான கல்வியாக உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான். நிர்வாக அறிவு  என்பது ஒருவருக்கு இயல்பாக அமைந்த திறமை என்ற நிலையிலிருந்து முன்னேறி, நிர்வாக இயலை ஒரு கல்வியாகப் பயிற்றுவித்து, நிர்வாகிகளை உருவாக்க முடியும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் நிர்வாக இயல் கல்வி.

'விஞ்ஞான முறை நிர்வாக இயல்' என்ற கருத்தை முதலில் உருவாக்கியவர்   ஃபிரெடெரிக் டெய்லர் என்ற அமெரிக்க மெக்கானிகல் இஞ்சினியர். இவர் உருவாக்கிய 'Time Study,' 'Motion Study' போன்ற வழிமுறைகள் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்த்ப்பட்டன. ஆயினும் ஹென்றி ஃபாயல் என்ற ஃபிரெஞ்ச் இஞ்சினியர்தான் நிர்வாக இயல் தத்துவங்களை வரையறுத்து, நிர்வாக இயல் என்பதை ஒரு பாடமாக வடிவமைத்தார். இதனாலேயே அவர் நவீன  நிர்வாக இயலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

Tuesday, August 16, 2011

தொழில் புரிய நிர்வாக இயல் அறிவு அவசியமா?

எந்த ஒரு தொழிலையும் நடத்த நான்கு விஷயங்கள் வேண்டும். தொழில் செய்வதற்கான இடம், ஆட்கள், முதலீடு மற்றும் தொழில் திறமை. ஆங்கிலத்தில் இவற்றை Land, Labor, Capital and Enterprise என்பார்கள். 

Enterprise என்ற சொல்லுக்கு ஆழமான பொருள் உண்டு. ஒருவர் துணிந்து ஒரு தொழிலைத் துவக்குவதையே Enterprise என்று குறிப்பிடலாம். ஒரு தொழிலைத் தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தும் திறமையை Enterprise என்ற சொல் குறிக்கிறது. நிர்வாக இயலும் இதில் அடங்கும். 

ஒரு சிறிய பெட்டிக்கடையை எடுத்துக் கொண்டால், மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களையும் ஒருவரே பார்த்துக் கொள்கிறார்.  

பணம் முதலீடு செய்பவர்  அவர்தான். இடமும் அவருடையது அல்லது அவர் ஏற்பாடு செய்தது. வேலை செய்பவரும் (பணியாளர்) அவர்தான். நிர்வாகியும் அவர்தான். 

ஒரு நிர்வாகி என்ற முறையில், என்னென்ன பொருட்களை விற்பது, அவற்றை எங்கே வாங்குவது, என்ன விலைக்கு விற்பது, கடன் கொடுப்பதா வேண்டாமா, லாபத்தை மீண்டும் கடையிலேயே முதலீடு செய்வதா அல்லது வேறுவகையில் பயன்படுத்துவதா போன்ற பல விஷயங்கள் பற்றி அவர் சிந்தித்து முடிவெடுக்கிறார்.

பெரிய தொழிலானால், இந்த நான்கு விஷயங்களையும் வெவ்வேறு நபர்கள் கவனிக்க வேண்டியிருக்கும்.

சற்றே பெரிய மளிகைக்கடை, அல்லது டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை எடுத்துக் கொண்டால், கடைக்கு முதலாளி என்று ஒருவர் இருப்பார். வேலையாட்கள் இருப்பார்கள். முதலீட்டுக்கான பணத்தைக் கடனாக வழங்கிய வங்கி அல்லது தனிநபர்கள் இருக்கலாம். கடையை நிர்வகிக்க ஒரு மானேஜர் இருக்கக் கூடும். 

சில இடங்களில், தொழில் துவங்குவதற்கான இடத்தை வழங்குவதில் அரசாங்கம் பங்கேற்கிறது. அரசாங்கத்தால் உருவாக்கப்படும் தொழில் பேட்டைகள், வீட்டு வசதி நிறுவனம், மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்றவை கட்டித்தரும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நிலம், முதலீட்டுத் தொகை, உழைப்பு ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் வழங்கினாலும், இவை மூன்றையும் பயன்படுத்தித் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, இந்த மூன்று தரப்பினர்க்கும் அவரவர்க்கு உண்டான பங்கைக் கொடுப்பதுடன், லாபமும் சம்பாதிக்க வேண்டியது நிர்வாகத்தின் (அதாவது நிர்வாகியின்) பொறுப்பு.

ஒரு நிர்வாகி திறமையாகச் செயல்படாமல், அதனால் தொழில் நசித்துப் போனால் என்ன ஆகும்?

1) தொழிலுக்காக வழங்கப்பட்ட இடம் (அது அரசாங்கத்தால்  வழங்கப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனத்தால் வாங்கப்பட்டிருந்தாலும்) வீணாகிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தி வேறு யாராவது தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும் பறிக்கப் பட்டதாக ஆகிறது.

2) முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிலிருந்து பெறக் கூடிய வட்டித் தொகையை இழப்பதுடன், சில சமயங்களில் முதலீட்டையும் இழக்க நேரிடுகிறது.

3)  தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. (அவர்கள் வேறு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தால், வேலையை இழந்திருக்க மாட்டார்கள் அல்லவா?)

4) தொழில் லாபகரமாக நடைபெறாததால், நிர்வாகிக்கு இழப்பு ஏற்படுகிறது. தொழிலின் வெற்றி தோல்விக்கான பொறுப்புகளையும் அவர்தான் ஏற்க வேண்டும்.
 
5) இது தவிர, இந்தத் தொழில் லாபகரமாக நடந்திருந்தால், அந்த லாபத்தை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அதே தொழிலிலோ அல்லது வேறு முதலீடு செய்யப்பட்டு, அதனால் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பலன்கள்  கிடைக்காமல் போகின்றன. 
.
ஒரு  தொழிலின் அடிபபடைக் கூறுகளான இடம், முதலீடு, ஆட்கள், நிர்வாகம் ஆகிய நான்கில் நிர்வாகமே மிக முக்கியமானதென்றும், மற்ற மூன்று கூறுகளும் நிர்வாகத்தையே சார்ந்திருக்கின்றன என்றும் இதனால் அறிய முடிகிறது. 

அப்படியானால் நிர்வாகம் என்றால் என்ன, நிர்வாகத் திறமையை எல்லோராலும்  வளர்த்துக் கொள்ள முடியுமா, அனைவராலும் நிர்வாக இயலைப் பயில முடியுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. 

நிர்வாகம் என்றால் என்ன என்பது குறித்து உலகின் பல நிர்வாக இயல் வல்லுனர்கள் எத்தனையோ நூல்களை இயற்றி உள்ளனர். அவை அனைத்தையும் கற்றாலும், நிர்வாக இயல் என்றால் என்ன என்பதைப் பற்றி வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். 

நிர்வாகம் சரியாக இருக்கும்போது, நிர்வாகம் என்று ஒன்று இருப்பதே எவரது கவனத்துக்கும் வராது. 

நிர்வாகம் சரியாக இல்லாமல் போய் பிரச்னைகள் ஏற்படும்போதுதான்   நிர்வாகம் சரியில்லை, நிர்வாகச் சீர்கேடு (mismanagement) என்றெல்லாம் அலசத் தொடங்குகிறோம். 

'அரசாங்கம் என்பது வயிறு மாதிரி. அது ஒழுங்காகச் செயல் படும் வரையில் அப்படி ஒன்று இருப்பதையே நாம் மறந்து விடுவோம்' என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. 

நிர்வாகத்துக்கும் இந்தப் பொன்மொழி பொருந்தும்.

சரி, நிர்வாகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வருவோம். மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நிர்வாகம்  என்பது எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, முறையாகச் செயல் படுத்துவது என்று  கூறலாம். 

ஆங்கிலத்தில் manage என்ற சொல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தொலைக்கட்சியில் வரும் ஒரு மொபெட் விளம்பரத்தில், ஒரு கல்லூரி மாணவன் "வீடு, காலேஜ் , லைப்ரரி எல்லாம் 'மானேஜ்' பண்றேன்" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். 

  "இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு எப்படி மானேஜ்  பண்ணுவது?" என்று சிலர் அங்கலாய்ப்பதையும் கேட்டிருக்கிறோம்.

எனவே நிர்வாகம் என்பது அம்பானி, முத்தையா, கோயங்கா, டாடா, பிர்லா போன்றவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. 

ஆப்பக்கடை ஆத்தா, அப்பளம் இட்டு விற்கும் ஏழைப்பெண், சைக்கிளில் பாத்திரம் விற்கும்  சின்னசாமி, தெருக்கோடியில் நின்று பேல்பூரி  விற்கும் விஜய் சோப்ரா என்று எல்லா வகை வியாபாரங்களில் ஈடுபடுவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

எனது நண்பர் ஒருவர் நிர்வாகத்  துறையில்  தான் பயின்ற செயல் திட்ட நடைமுறைத் திட்டம் (Project Planning) என்ற பாடத்தைத் தன் மகளின்  திருமணத்திற்குப் பயன் படுத்தினார். 

ஒரு செயல் திட்டத்தை (Project) எவ்வாறு திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றுவார்களோ, அதைப் போலவே திருமண வேலைகளையும் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்தார். 

விளைவு? செலவு குறைந்தது. வேலைகள் விரைவாக, தடையின்றி நிறைவேறின. திருமணம் அனைவரும் பாராட்டும்படியாகச் சிறப்பாக நடந்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஏற்படக் கூடிய 'டென்ஷன்' என்கிற மன  அழுத்தம் அவரை அணுகவில்லை. 

 இப்போது அவர் வேலையை உதறி விட்டுத் திருமண ஏற்பாடுகளைச் செய்து தரும் காண்டிராக்டராகச் சொந்தத் தொழில் செய்கிறார்!

நாம் முதலில் எழுப்பிய மூன்று கேள்விகளில், 'நிர்வாகம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு ஒரு அறிமுக விளக்கம் இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும். 

இப்போது இரண்டாவது கேள்விக்கு வருவோம். 'நிர்வாகத் திறமையை எல்லோராலும் கற்றுக் கொள்ளவோ, வளர்த்துக் கொள்ளவோ முடியுமா?'

'முடியாது' என்று உடனே பதில் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 

1. பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காதவர்கள். இவர்களுக்கு 'நிர்வாக இயல்' என்று ஒரு ,வகைப் படிப்பு இருப்பதே தெரிந்திருக்காது. ஆயினும் இவர்கள் சிறப்பான நிர்வாகிகளாகச் செயலாற்றியிருக்கிறார்கள். (இல்லாவிட்டால், அவர்களால் தொழில் பெரும் வெற்றி அடைந்திருக்க முடியாதல்லவா?) 

எனவே, நிர்வாகத் திறமை என்பது சிலருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. 'கவிஞன் பிறக்கிறான், உருவாக்கப் படுவதில்லை' என்று ஒரு கூற்று உண்டு. அதேபோல், 'நிர்வாகிகள் பிறக்கிறார்கள், உருவாக்கப்  படுவதில்லை' என்பது ஒரு சாராரின்  கருத்து. 

நிர்வாக இயலில் பட்டம் பெற்ற சிலரை விட, அதிகம் படிக்காத சில நிர்வாகிகள் வெற்றிகரமாகச் செயல்படுவதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2. இதை மறுக்கும் இன்னொரு சாரார், 'சிலருக்கு இயல்பாகவே நிர்வாகத் திறமை இருக்கலாம். ஆனால் இந்தத் திறமையை, பயிற்சி மூலம் யாருக்கு வேண்டுமானாலும் அளிக்க முடியும்' என்பது இவர்கள் வாதம். 

நிர்வாக இயல் படித்து, தாங்கள் படித்தவற்றைப் பயன்படுத்திச் சிறப்பான சாதனைகள் புரிந்தவர்களைத் தங்கள் கருத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டுகிறார்கள். 

ஆனால், இதில் ஒரு  முரண்பாடு உள்ளது. நிர்வாகக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள், இந்தப் படிப்பில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும்தான் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 

இதை வெறும் இடங்களைப் பூர்த்தி செய்யும்முறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அஞ்சல் மூலம்  நிர்வாக இயலைப் பயிற்றுவிக்கும் சில புகழ் பெற்ற நிறுவனங்களும் இந்த  நுழைவுத் தேர்வு முறையைப் பயன்படுத்துகின்றன. 

இதை இவர்கள் aptitude test என்று அழைக்கிறார்கள். அதாவது நிர்வாக இயல் படிப்பை மேற்கொள்ளும் அறிவுத் திறன் அல்லது மனத்திறன்   யாருக்கெல்லாம்  இருக்கிறது என்று இந்தக் கல்வி நிறுவனங்கள் சோதித்துப் பார்த்து, சோதனையில் யாரெல்லாம் தேறுகிறார்களோ, அவர்களை மட்டும்தான் நிர்வாக இயல் படிப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். 

இதன் பொருள், 'நிர்வாக இயல் பயிலும் தகுதி எல்லோருக்கும் இல்லை, சிலருக்குமட்டும்தான் இருக்கிறது' என்பதுதானே?   

இந்தக் கருத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஏனெனில், நிர்வாக இயல் கல்வியில் பல உயர்நிலைத் தத்துவங்களும், கணிதம், பொருளாதாரம் போன்ற பாடங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பலவற்றைப் புரிந்து கொள்வது சிலருக்கு மட்டுமே இயலக் கூடும். 

அதனால், இதுபோன்ற உயர்நிலைத்  தத்துவங்களைப் புரிந்து  கொள்ளக் கூடிய அறிவுத்திறனும், சிந்தனைத்திறனும் உள்ளவர்கள் மட்டுமே நிர்வாக இயல் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால் நிர்வாக இயலில், எளிய, நடைமுறையில் அனைவரும் பின்பற்றக் கூடிய பல தத்துவங்கள் இருக்கின்றன. இவற்றை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றைத் தங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும், வேலையிலும் பயன்படுத்தி ஏற்றமடையலாம்.

இந்த வலைப்பதிவின் நோக்கம் அனைவருக்கும் பயன்படக் கூடிய, நடைமுறைக்கு எளிதான சில  நிர்வாக இயல் கருத்துகளை விளக்குவதுதான். 

சரி. இனி, நுழைவாயிலைக் கடந்து நிர்வாக இயல் என்ற அற்புதமான கட்டடத்துக்குள் நுழையலாமா? அதற்கு முன் ஒரு கேள்வி. .உலகிலேயே மிகச் சிறந்த நிர்வாகி யார்? 

இந்தக்கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில்.