Saturday, April 27, 2013

என்றும் பதினாலு!

'விஞ்ஞான முறை நிர்வாக இயலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்றி ஃபாயல் (Henri Fyol) 'விஞ்ஞான முறை நிர்வாக இயலின் அடிப்படைத் தத்துவங்கள்' என்று பதினாலு (பதினான்கு) விஷயங்களைக் குறிப்பிட்டார். 

இந்தப் பதினான்கு கோட்பாடுகளும் இன்றும் நிர்வாக இயலின் அடித்தளக் கற்களாக விளங்குகின்றன. இவற்றை முதலில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1) வேலையைப் பகிர்ந்தளித்தல்
எந்த ஒரு வேலைக்கும் பல கூறுகள் உண்டு ஒருவரே ஒரு வேலையின் பல கூறுகளையும் செய்யும்போது, ஒவ்வொரு வேலைப் பிரிவுக்கும் அவரது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் அவரது உற்பத்தித்திறன் குறைகிறது என்பது ஹென்றி ஃபாயலின் கூற்று.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் தினமும் அறுநூறு கடிதங்கள் அனுப்பப்படுவதாக வைத்துக் கொள்வோம். இந்த வேலையை மூன்று பேருக்குப் பகிர்ந்து கொடுப்பதாக இருந்தால் இதை இரண்டு விதமாகச் செய்யலாம்.

ஒவ்வொருவருக்கும் இருநூறு கடிதங்களை அனுப்பும் பொறுப்பைக் கொடுப்பது ஒரு வகை.

ரவி, ரகு, ரேவதி என்ற 3 பேருக்கு இந்த வேலை பகிர்ந்தளிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். (மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்திருக்கிறோம்!)

மொத்தக் கடிதங்கள் 600.

ஒவ்வொருவருக்கும் 200 கடிதங்களை அனுப்ப வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) கடிதத்தை மடித்து உறைக்குள் வைப்பது
2) உறையில் விலாசம் எழுதுவது
3) உறையை ஒட்டி, தபால் தலை ஒட்டுவது.

ரவி என்ன செய்வார்? முதல் கடிதத்தை எடுத்து, மடித்து உறைக்குள் போடுவார். பிறகு உறையில் விலாசம் எழுதுவார். பிறகு உறையை மூடி, ஒட்டி, தபால் தலை ஒட்டுவார். 

இதுபோல் ஒவ்வொரு கடிதமாக எடுத்து, ஒவ்வொரு பகுதியாக வேலையைச் செய்து முடிப்பார். இருநூறு கடிதங்களையும் இவ்வாறு தயார் செய்வார்.

இதேபோல், ரகுவும், ரேவதியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இருநூறு கடிதங்களைத் தயார் செய்வார்கள்.

இந்த மூன்று வேலைகளையும் ஒருவரே மாறி மாறிச் செய்யும் இந்த முறையில் சில குறைபாடுகள் உள்ளன.

1) ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது சற்றே நேரம் வீணாகும். இதனால் உற்பத்தித்திறன் (செயல் திறன்) குறையும்.

2) ஒரு வேலையின் பல பகுதிகளையும் ஒருவரே செய்யும்போது, அவரது கவனம் சிதறி, சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏதாவது ஒரு உறையில் விலாசம் எழுதாமல் விடுபட்டுப் போகலாம். இன்னொரு உறை சரியாக ஒட்டப்படாமல் இருக்கலாம். மற்றொரு உரையில் தபால் தலை சரியாக ஒட்டப்படாமல் அது உறையிலிருந்து கீழே விழுந்து விடலாம். 

திருமண அழைப்பிதழ்கள் அனுப்பும்போது இது போன்ற தவறுகள் ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். சில சமயம் தவறின் பலனையும் அனுபவித்திருப்போம். ('என்னப்பா, கல்யாணத்துக்கு மொய் எழுத மாட்டேன்னு நெனைச்சு, பத்திரிகை வாங்கும்போதே டியூ கட்டி வாங்க வச்சுட்டியே!)

இந்த வேலையை இன்னொரு விதமாகவும் பகிர்ந்தளிக்கலாம்.

1) கடிதங்களை மடித்து உறையில் போட வேண்டியது ரவியின் வேலை (600 கடிதங்களையும்.)

2) உறைகளில் விலாசம் எழுதும் வேலை ரேவதியுடையது.

3) உறைகளை ஒட்டி, ஸ்டாம்ப் ஒட்டும் வேலை ரகுவுடையது.

இந்த முறையில், ஒவ்வொருவரும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால், அந்த வேலையில் அவர் திறமை வளர்கிறது. 

ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப்ப் பலமுறை செய்வதால், அந்த வேலையைச் சுலபமாக (லாகவமாக), வேகமாக, திறமையாகச் செய்யும் வழிகளை அவர் தன்னையறியாமலே கண்டு பிடிப்பார். இதனால் அவரது செயல் திறன் கூடும்.

இரண்டாவதாக, வேலை ஒரு வரிசை முறையில் நடைபெறுவதால், எந்த ஒரு பகுதியும் விட்டுப் போவதற்கான வாய்ப்புக் குறைவு.(கடிதத்தை உறைக்குள் போட மறந்து ஸ்டாம்ப் ஒட்டுவது போன்ற தவ்றுகள்)

ரவி ஒவ்வொரு உறையாக எடுத்து, கடிதத்தை உள்ளே வைத்து ரேவதியிடம் கொடுக்க, ரேவதி அவற்றில் விலாசம் எழுதி ரகுவிடம் கொடுக்க, ரகு உறையை ஒட்டி, ஸ்டாம்ப் ஒட்ட, வேலை நிறைவு பெறுகிறது. இதனால், விலாசம் எழுத விட்டுப் போவது, ஸ்டாம்ப் ஒட்ட விட்டுப் போவது போன்ற தவறுகள் நேரும் வாய்ப்பு மிகக் குறைவு.

மேலும் பசை ஒட்டும் வேலையை ரகு மட்டுமே செய்வதால், கடிதத்தை உறையில் போடும்போதும், விலாசம் எழுதும்போதும், பசை படிந்த கையினால் தொந்தரவு வராது. மேலும், வேலை முடிந்ததும், ஒருவர் (ரகு) மட்டும் கை கழுவினால் போதும். இதனால், தண்ணீர் மற்றும் சோப்பைக் குறைவாகப் பயன்படுத்தினால் போதும்.

இந்த வேலையின் மூன்று பகுதிகளையும் இதேமுறையில் ஒருவரே செய்யலாமே என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்..

அதாவது, ரவியை எடுத்துக் கொண்டால், முதலில் எல்லாக் கடிதங்களையும் ஒவ்வொன்றாக உறையில் போடுகிறார்.
இரண்டாவதாக, எல்லா உறைகளிலும் விலாசம் எழுதுகிறார்.
மூன்றாவதாக, உறைகளை ஒட்டி, அவற்றின்மீது ஸ்டாம்ப் ஒட்டுகிறார்

இதுபோல், ஒரு வேலையைப் பகுதி பகுதியாகப் பிரித்துச் செய்தாலும், இதே போன்ற பலன் தான் கிடைக்கும். 

ஒருவேளை, கடிதங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், வேலையின் மூன்று பகுதிகளையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஒருவரே செய்ய வேண்டியிருக்கலாம். 

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது, முதலில் ஒரு கடிதத்தை எடுத்து உறையில் போட்டு, ஸ்டாம்ப் ஒட்டுவதை விட, முதலில் எல்லாக் கடிதங்களையும் உறைகளுக்குள் போட்டு விட்டு, பிறகு விலாசம் எழுதி, பிறகு ஒட்டுவது சிறப்பானது.

இதைத்தான் ஹென்றி ஃபாயல்  Division of Labor என்று குறிப்பிடுகிறார்.